நள்ளிரவில் நிர்வாண கோலத்தில் வீதியில் வலம் வரும் மர்ம மனிதனால் கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அந்த நபர் எழுப்பும் அகோர சத்தத்தால் உறக்கம் இன்றி தவிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம்  விஎன்ஆர் நகரைச் சேர்ந்த, கமால் பாஷா தெருவில் வசிப்பவர் ஜாபர் அலி, நேற்று அவர் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் அவர் வீட்டு வாசலில் ஒருவித சத்தம் கேட்பதுபோல் இருந்தது, அந்த அமானுஸ்ய சத்தத்தால் அச்சத்தில் உறைந்த அவர், விடிந்ததும் தனது வீட்டில் உள்ள   கண்காணிப்பு கேமராவில் அது குறித்து பார்த்தார், அப்போது  அதில், ஒரு மர்ம நபர் நிர்வாண கோலத்தில் தெருவில் நின்று அவரின் வீட்டை உற்றுநோக்குவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.  அதைக் கண்ட கமால் பாஷா,  மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த நபர் யார்.?  அவர் ஏன் தனது வீட்டை உற்று நோக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் அது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

நிர்வாண கோலத்தில் உலா வரும் அந்த நபர், அந்த பகுதியில் இரவு நேரத்தில் ஒரு வித சத்தம் எழுப்புவதும்,  வீட்டு ஜன்னல்களில் எட்டி பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறார். பகல் நேரங்களில் அவரை காணமுடிவதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுவதுடன் நள்ளிரவு நேரத்தில் மட்டும் அந்த நபர் இப்படி நடந்துகொள்வதால் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.  அந்த நபர் குறித்து பொதுமக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். சில நேரங்களில் அந்த நபர்  மாடிப் படிக்கட்டுகளில் ஏறி ஓடுவது போன்ற சேட்டைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரின் நடவடிக்கை வித்தியாசமாக உள்ளதால் அவர் திருடான அல்லது கொள்ளையடிக்க நோட்டமிடும்  நபரா.? அல்லது சைக்கோ கொலைகாரனா.? அல்லது மனநோயளியா.? என்பன உள்ளிட்ட பல்வேறு வகையில் சந்தேகித்து வருகின்றனர். அமானுஸ்யமான முறையில் மக்களை அச்சுறுத்தி வரும் அந்த நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.