விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாரம் அருகே நேற்று மாலை 4 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் 5 பேர் இருந்தனர். இந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோர கால்வாயை தாண்டி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த 4 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. 
சென்னை கொடுங்கையூர் மீனாட்சியம்மன் கோவில் நகரை சேர்ந்த ஷக்ரியானா மகன் அப்துல்ஹரீம் . இவர் பழைய கார்களை விலைக்கு வாங்கி மறு விற்பனை செய்து வருகிறார். 
இவர் பெரம்பூர் அருகே அகரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி அமுதா என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.10 லட்சம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. கொடுத்த கடனை திருப்பித்தரும்படி அமுதா பலமுறை அப்துல்ஹரீமிடம் கேட்டும் அவர் பணத்தை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் அமுதா, மணலியை சேர்ந்த ராஜாராம் மகன் பிரகாஷ் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த வசீர்கான் , இவருடைய தம்பி ரசூல்கான் ஆகிய 4 பேரும் சேர்ந்து அப்துல்ஹரீமை அவரது வீட்டிற்கு தேடி சென்றனர். 
அங்கு அவரது மனைவி ஆயிஷா இருந்தார். அவரிடம், உங்களுடைய கணவர் அப்துல்ஹரீம் எங்கு சென்றுள்ளார் என்று 4 பேரும் கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனது கணவர் பள்ளிவாசலுக்கு சென்றுள்ளதாக கூறினார்.

பின்னர் பள்ளிவாசலுக்கு சென்ற அவர்கள் 4 பேரும் அங்கு நின்றிருந்த அப்துல்ஹரீமை பார்த்து அவரிடம் உடனடியாக பணம் தர வேண்டும் என கூறியதாக தெரிகிறது. அதற்கு அப்துல்ஹரீம் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து தாங்கள் வந்த ஒரு காரில் அப்துல்ஹரீமை கடத்திச்சென்றனர். காரை ரசூல்கான் ஓட்டினார்.

இதனிடையே அப்துல்ஹரீம் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது மனைவி ஆயிஷா, இதுபற்றி கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ஹரீமை தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த அமுதா தரப்பினர், போலீசாரை திசை திருப்புவதற்காக காரில் புதுச்சேரிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து திண்டிவனம் வழியாக சென்னை நோக்கி செல்ல திட்டமிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். 

கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த வசீர்கான் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த அமுதா, ரசூல்கான், பிரகாஷ், அப்துல்ஹரீம் ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.