மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியைக்கூட விட்டுவைக்காமல் பாலியல் தொல்லை கொடுக்கும் சபல பேர்வழிகள் பெருகிவிட்டார்கள். அதற்கு உதாரணமாக, வேலூரில் நடந்த சம்பவத்தைச் சொல்லலாம். மகள் வயதில் உள்ள 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகன் பெயின்டரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். 

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் பெருமுகை பீடி காலனி உள்ளது. இந்தப் பகுதியில் ஷாஜகான் என்ற பெயின்டர் வசித்துவருகிறார். 37 வயதான அவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். ஆனால், மனைவியையும் மகளையும் பிரிந்து ஷாஜகான் தனியாக வசித்துவருகிறார். இரு தினங்களுக்கு முன்பு போதை தலைக்கேறிய நிலையில் ஷாஜகான் இருந்திருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் வாயைப் பொத்தி கழிவறைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார். 

அங்கே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து, பெயிண்டர் ஷாஜகான் மீது வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஷாஜகானை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், வேலூர் மாவட்டத்தில் அவர் மீது 7 பாலியல் வன்கொடுமை வழக்குகள் மற்றும் 96 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.