மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்குவதுபோல் நடித்து, அங்கிருந்த கல்லாப்பெட்டியில் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்கள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே படந்தாலுமூடு பகுதியில் ரவி மெமோரியல் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள மெடிக்கல் ஷாப்பில், பெண் ஊழியர் உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு மெடிக்கல் ஷாப்பில் வேலை முடிந்து, பெண் ஊழியர் மருந்துகளின் விற்பனை குறித்து கணக்கு பார்த்தபோது ரூ.8,300 குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார். 

அதில், மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்குவது போல் வந்த 2 வாலிபர்கள், பெண் ஊழியரிடம் மருந்து கேட்பதும், அவர் மருந்தை எடுக்க திரும்பியபோது, கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை திருடியதும் காட்சியாக பதிவாகி இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விடியோ காட்சிகளை வைத்து, தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.