தமிழக-கேரள எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள புளியரை சோதனை சாவடி வழியாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வது வழக்கம். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவ்வழியாக கேரளாவில் இருந்து கோழி, மருத்துவ, பிளாஸ்டிக், மற்றும் பல்வேறு விதமான கழிவுகளை லாரிகள் முலம் தமிழக எல்லை பகுதிகளில் கொட்டி வந்தனர். இதனால் மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆட்பட்ட நிலையில் மக்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில் மாவட்ட காவல் துறையினர்ரும், சுகாதார துறையினரும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். 

இந்நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் காவல்துறையினர்ரும்,சுகாதாரத்துறையும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மருத்துவக் கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவு ஏற்றிவந்த 27 லாரிகளை தமிழகத்துக்குள் நுழைய விடாமல் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

மேலும் அந்த லாரிகளை சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்த பின்னர் லாரி ஓட்டுனர்களிடமிருந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று பெற்ற பின்னரே வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும். என அறிவுறுத்தப்பட்டு அந்த லாரிகள் அனைத்துக்கும் அபராதம் விதித்து கேரள மாநிலத்திற்க்கு திருப்பி அனுப்ப தமிழக எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் சுகாதார துறை இணை இயக்குநர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்க்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கேரளாவில் இருந்து 27 லாரிகளில் மருத்துவ கழிவு, பிளாஸ்டிக், மற்றும் பல்வேறு கழிவுகள் ஏற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதில் 27 லாரிக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும், 4 லாரிகளுக்கு மேலும் 3 லட்சம் அபராதம், ஆக மொத்தம் 39 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். தொடர்ந்து எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளார்.