சேலம் ஆட்டையாம் பட்டியில் உள்ள மாதேஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அறிவுச்செல்வன், கறிகடை வியாபாரியான இவருக்கு பார்வதி என்ற மனைவியும், கருணாஸ், கோகுல்ராஜ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். 

இந்த நிலையில் அறிவுசெல்வனுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 10 மாதங்களாக அறிவுச்செல்வனும், அவரது மனைவி பார்வதியும் பிரிந்து வாழ்கின்றனர். 

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் அறிவுச் செல்வன் கள்ளக் காதல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் கள்ளக் காதலை வைவிடுமாறு இளம் பெண் மற்றும் அறிவுச் செல்வனை எச்சரித்துள்ளனர்.

ஆனால் அதனை சட்டைசெய்யாத அறிவுச் செல்வனும் அந்த இளம் பெண்ணும் தங்களது கள்ளக் காதலைல் தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று, வீட்டிலிருந்த அறிவுச் செல்வனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து, மகன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அறிவுச்செல்வனின் தந்தை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் சடலத்தை மீட்டு, பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அறிவுச் செல்வனின் கள்ளக் காதலியின் உறவினர்கள் தான் வெட்டிக் அவரை கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.