Asianet News TamilAsianet News Tamil

இமெயில் மூலம் வந்த புகார்... நீட் தேர்வு எழுதிய மாணவன் யார்? டாக்டர் குடும்பமே தலைமறைவு... உள்ளே புகுந்த சிபிசிஐடி!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் அரசு மருத்துவர் வெங்கடேசன், மாணவன் உதித்சூர்யாவுடன் குடும்பத்தோடு தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கடேசனின் செல்போன் நம்பரை டிரேஸ் செய்து வைத்து தனிப்படை போலீசார் மாணவன் உள்பட டாக்டர் குடும்பத்தினரை வலைவீசித் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த ஆள்மாறாட்ட கேஸ் சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது. 

MBBS student booked for cheating, criminal conspiracy
Author
Chennai, First Published Sep 20, 2019, 5:24 PM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் அரசு மருத்துவர் வெங்கடேசன், மாணவன் உதித்சூர்யாவுடன் குடும்பத்தோடு தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கடேசனின் செல்போன் நம்பரை டிரேஸ் செய்து வைத்து தனிப்படை போலீசார் மாணவன் உள்பட டாக்டர் குடும்பத்தினரை வலைவீசித் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த ஆள்மாறாட்ட கேஸ் சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது. 

சென்னை தண்டையார்பேட்டையில் வசித்து வரும் வெங்கடேசன். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகனான உதித்சூர்யா, ஆதி திராவிடர் ஒதுக்கீட்டில் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவப்படிப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9ம் தேதி தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு இமெயில் மூலம் அசோக் என்பவர் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நீட் தேர்வு எழுதிய நபர் ஒருவர் என்றும், தற்போது மருத்துவப்படிப்பு மேற்கொண்டு வருவது வேறொரு நபர் என்றும், போட்டோ ஆதாரத்துடன் இமெயில் புகார் வந்துள்ளது. இது குறித்து தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் 4 டாக்டர்கள் கொண்ட டீம் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மருத்துவப்படிப்பில் பயின்று வருபவரின் போட்டோவும், தேர்வு எழுதிய மாணவனின் போட்டோவும் வேறு வேறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையில் நீட் தேர்வு எழுதிய மாணவனின் போட்டோ, சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கலந்தாய்வுக்குச் சென்றவரின் போட்டோ, ஒரே மாணவனுடையது.

ஆனால், மருத்துவ கல்லூரியில் பாடம் படிக்கச் சென்றதோ அரசு மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா என்பது விசாரணையில் அம்பலமானது.  இதையடுத்து மருத்துவ கல்வி இயக்குநகரத்தின் ஆய்வறிக்கையை பெற்று மருத்துவ கல்லூரி நிர்வாகம் தேனி கானாகாவல் நிலையத்தில் ஆள்மாறாட்டம் தொடர்பாக புகார் அளித்தது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

தேனி மாவட்ட காவல் அதிகாரிகள் சென்னை தண்டையார் பேட்டைக்கு விரைந்து மாணவனின் வீட்டில் சோதனை நடத்த முயன்றனர். ஆனால் போலீசிடம் சிக்காமல் மருத்துவர் வெங்கடேசன் மாணவன் உதித் சூர்யாவுடன் குடும்பத்தோடு தலைமறைவானார். இதையடுத்து போலீசார் மாணவன் வசித்து வந்த வீட்டின் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். வீட்டிற்கு முன்பு இருந்த தபால் பெட்டியிலும் சோதனை நடத்தப்பட்டது.

கடந்த 3 நாட்களாகவே வீடு பூட்டப்பட்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி தலைமறைவான அரசு டாக்டர் வெங்கடேசனின் செல்போனை நம்பரை வைத்து கொண்டு தனிப்படை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் ஆள்மாறாட்டம் செய்து எழுதிய அந்த பையன் யார்? ஈமெயில் மூலம் உதித் சூர்யா மீது புகார் கொடுத்தது யார்?, ஆள் மாற்றாட்ட மோசடிக்கு உடந்தையாக இருந்தது யார்? நீட் தேர்வு எழுதுவதற்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியதா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதனிடையே மருத்துவக்கல்வி இயக்குநரகம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் 2019 - 2020ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் நீட் தேர்வு புகைப்படம், கலந்தாய்வு புகைப்படம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து உடனடியாக ஆய்வறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரியின் துணை முதல்வர், துறை தலைவர் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு மூலம் ஒவ்வொரு மாணவர்களின் புடைப்படம் குறித்தும் தனித்தனியாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் விடுப்பில் உள்ள மாணவர்களை கல்லூரிக்கு வரவழைத்து புகைப்படங்களை சோதனை நடத்தவும் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக உதித் சூர்யா என்ற மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு புதிதாகச் சேர்ந்து பயின்று வரும் மற்ற மாணவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த வழக்கு போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி போலீசார் வசம் மாற்றம் செய்யப்படவுள்ளதாகக் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கல்லூரியில் புதிதாககச் சேர்ந்த 100 மாணவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்கும் பணியை விசாரணை குழு தொடங்கியுள்ளது.

சரிபார்க்கும் பணியில் மாணவர்களின் போட்டோ சான்றிதழில் உள்ள போட்டோக்களுடன் ஒத்துப்போகிறதா என ஆய்வு செய்யப்படும். இதனிடையே உதித் சூர்யா குறித்து புகார் வந்த ஈமெயில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளது என்றும் அதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. 

நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசுதான் நடத்துவதாகவும், ஆள்மாறாட்டம் குறித்து தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீனுக்கு ஈமெயில் வந்ததாகவும் அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் பதிலளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios