கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, நிறுவனங்களில் நாடு முழுவதும் வருமானவரித்துறையினர்  கடந்த மே மாதம் சோதனை நடத்தினர். அப்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட, மார்ட்டின் நிறுவன கேஷியர் கோவை, உருமாண்டாம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி,  மர்மமான முறையில் வெள்ளியங்காடு குளத்தில் பிணமாக மிதந்தார்.


வருமானவரி அதிகாரிகள் எனக்கூறி வீட்டிற்கு வந்த நபர்கள் தாக்கியதாக, குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சந்தேக மரணம், தற்கொலைக்கு துாண்டல் சட்டப்பிரிவுகளில், காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

பழனிசாமி சடலம் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட நிலையில், பிரேதத்தை பெற குடும்பத்தினர் மறுத்தனர். சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட், பழனிசாமி உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இதனையடுத்து, கோர்ட் உத்தரவுப்படி 2வது முறையாக கோவை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த அறிக்கையை, மருத்துவ குழுவில் இடம்பெற்றிருந்த சம்பத்குமார், கோவை குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்தார். 

அந்த அறிக்கையில், மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.