விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் . இவர் திருஷ்டி கழிக்க பயன்படும் கருடன் கிழங்கை விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார் . இவரின் நண்பர் தனசேகர் . இவரும் அதே தொழிலை செய்து வந்தார் . 

இருவரும் ஒன்றாக சேர்ந்து கருடன் கிழங்கை எடுக்கச் செல்வார்கள் என கூறப்படுகிறது .அதனால் இருவரும் சேர்ந்து விற்பனை செய்து அதில் வரும் பணத்தை சமமாக பிரித்துக் கொண்டுள்ளனர். பின்னர் இரண்டு பெரும் சேர்ந்து மது அருந்துவர்களாம் .

சம்பவத்தன்றும் இருவரும்  சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள் .அப்போது ஏற்கனவே முருகேசன் தரவேண்டிய 100 ரூபாய் பணத்தை சேர்த்து தருமாறு தனசேகர் கேட்டிருக்கிறார் . அதற்கு முடியாது என்று முருகேசன் மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . ஒருகட்டத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர் . அப்போது தனசேகர் , அருகே கிடந்த கற்களைக் கொண்டு முருகேசனை தாக்க தொடங்கியிருக்கிறார் . அதில் பலமாக காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார் .

இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் . சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் போதையில் இருந்த தனசேகரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் .