கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(45). கட்டிட தொழிலாளியாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். பின் ஊர் திரும்பிய அவர் சொந்த வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த வாரம் 27 ம் தேதி இரவு, தனது இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது, குளக்கரை அருகே மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் அலெக்சாண்டரை கொலை செய்த மர்ம கும்பலைச் சேர்ந்த சுனில்(23) என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில், அலெக்ஸாண்டருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராதா(பெயர் மாற்றட்டுள்ளது) என்கிற பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அப்பெண்ணின் மகன் ஜவகரும் சுனிலும் நண்பர்கள். இதனால் இருவரும் அலெக்சாண்டரை பலமுறை எச்சரித்துள்ளனர்.

ஆனாலும் ராதாவுடனான கள்ள உறவை அலெக்சாண்டர் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜவகர், சுனிலுடன் சேர்ந்து அலெக்சாண்டரை கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி சம்பவத்தன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அலெக்சாண்டர் மீது மிளகாய் பொடியைத் தூவி நிலைகுலைய செய்துள்ளனர். பின் 5 பேர் சேர்ந்து அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அனைவரும் தலைமறைவாகி விட, சுனில் மட்டும் காவல்துறையில் சிக்கியுள்ளார்.

இதையடுத்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். கொலையில் தொடர்புடைய ஜவகர் மற்றும் 2 பேர் காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.