விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இருக்கிறது குறிஞ்சிப்பை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஜானகிராமன். விவசாயியான இவரது வீடு வயல்நிலங்களுக்கு அருகே இருக்கிறது. இவர் வசிக்கும் அதில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். நிலப்பிரச்சனை சம்பந்தமாக இருவருக்குள்ளும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி தகராறும் ஏற்பட்டிருக்கிறது.

நேற்று இரவும் இரண்டு பேரிடையே குளக்கரை அருகில் தகராறு நிகழ்ந்துள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கிருந்தவர்கள் ஜானகிராமனையும் சரவணனையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தநிலையில் இன்று காலையில் ஜானகிராமன் அப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவலர்கள் ஜானகி ராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி சரவணனை விசாரணைக்காக தேடிய போது தான் அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் சரவணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.