திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரின் மகன் மாரி என்கிற மாரியப்பன்(30 ). இவர் சேரன்மகாதேவியில் இருக்கும் நூலகம் அருகில் பாத்திர கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று மாலை சேரன்மகாதேவி அருகே வீரவநல்லூரில் இருக்கும் மதுபான கடையில் மது வாங்கச் சென்றிருந்தார். கடையின் உள்ளே அவர் நின்று கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் மாரியப்பனை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டினர். தப்பி ஓட முயன்ற அவரை விடாமல் துரத்திச் சென்று துடிக்க துடிக்க அரிவாளால் வெட்டினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரவநல்லூர் காவல்துறையினர் மாரியப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணையை தொடங்கியது. முதற்கட்ட விசாரணையில், கடந்த 2018 ம் ஆண்டு சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் வைத்து தங்கபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மாரியப்பன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது.

இதையடுத்து தப்பியோடிய மூன்று பேர் கொண்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.