காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இருக்கும் பருத்திக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(30). இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(38). உத்திரமேரூர் பேரூராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதனிடையே திருமணத்திற்கு முன்பாக சண்முகசுந்தரமும் திவ்யாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களது காதலை ஏற்க மறுத்த திவ்யாவின் தாய் அவரது அண்ணன் மகனுக்கு திவ்யாவை திருமணம் செய்து வைத்துள்ளார்.

எனினும் காதலனை மறக்காத திவ்யா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து அவரோடு பேசி வந்திருக்கிறார். நாளடைவில் அவர்களுக்குள்ளான நெருக்கம் அதிகமாகி கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியில் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இது குறித்த தகவல் அரசல்புரசலாக ஜெயக்குமாருக்கு தெரியவரவே மனைவியை கண்டித்திருக்கிறார். இருப்பினும் திவ்யா தொடர்ந்து சண்முக சுந்தரத்துடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவுதலை கட்டுப்ப்டுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் வெளியிடங்களுக்கு சென்று கள்ளக்காதலர்கள் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது திவ்யாவின் வீட்டு வழியாக சண்முகசுந்தரம் சென்று வந்திருக்கிறார். சண்முகசுந்தரம் வரும் நேரத்தில் திவ்யாவும் வீட்டு வாசலில் நிற்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதை கண்ட ஜெயக்குமார், திவ்யாவின் அண்ணன் தினேஷ்(27) என்பவருடன் சென்று சண்முகசுந்தரத்திடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அருகில் கிடந்த கட்டையை எடுத்து சண்முக சுந்தரத்தை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த உத்திரமேரூர் காவல்துறையினர் ஜெயக்குமார் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர் .அவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஊரடங்கு நேரத்தில் சந்திக்க வந்த மனைவியின் கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.