விருதுநகரைச் சேர்ந்தவர் குணசேகரன்(35). இவரது மனைவி பழனியம்மாள்(29). குணசேகரன் கேரளா மாநிலம் மூணாறில் இருக்கும் ஒரு எஸ்டேட்டில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு இவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நெருங்கி பழகிய இவர்கள் நாளடைவில் கள்ளகாதலர்களாக மாறியுள்ளனர். இந்தவிஷயம் பழனியம்மாளுக்கு தெரிய வரவே கணவரை கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக இருவரிடையேயும் சண்டை நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று பழனியம்மாள் தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். அங்கு சென்றும் குணசேகரன் தகராறு செய்துள்ளார். அதன்பிறகு பழனியம்மாள் காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் சங்கரபாண்டியபுரத்தில் பழனியம்மாள் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்று விசாரணையை தொடங்கினர்.

காவல்துறையினரின் விசாரணையில் கணவன் மனைவி இடையே தகராறு நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவலர்களுக்கு குணசேகரன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை விசாரணைக்கு தேடிய போது அவர் மூணாறு சென்றிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் குணசேகரனை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.