கும்மிடிப்பூண்டி அருகே இருக்கும் குருபரா கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி புஷ்பா(39). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். ரமேஷ் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகள் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் புஷ்பாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கும் இடையே வெகுநாட்களாக பழக்கம் இருந்துள்ளது. நெருங்கி பழகிய அவர்கள் நாளடைவில் கள்ளக்காதலர்களாக மாறி உள்ளனர். இந்த விஷயம் ரமேஷிற்கு தெரியவரவே மனைவி புஷ்பாவை கண்டித்திருக்கிறார்.

இது தொடர்பாக கணவன் மனைவி இடையே தொடர்ந்து தகராறு நிகழ புஷ்பா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மீண்டும் கணவர் வீட்டுக்கு புஷ்பா வந்ததை அறிந்த கள்ளக்காதலன் புஷ்பாவை சந்தித்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரமேஷ் வர கள்ளக்காதலன் தப்பி ஓடிவிட்டார். அப்போதும் கணவன்-மனைவி இடையே சண்டை நிகழ்ந்துள்ளது. எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி மீது ஆத்திரமடைந்த ரமேஷ் அவரை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். 

நேற்று இரவு இரண்டு குழந்தைகளையும் அருகே இருக்கும் உறவினர் வீட்டிற்கு ரமேஷ் அனுப்பி வைத்துள்ளார். பின்பு கணவன் மனைவி இருவரும் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் எழுந்த ரமேஷ் புஷ்பாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். பின்னர் விடிந்ததும் கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் கூறிய தகவலின்படி ரமேஷின் வீட்டிற்கு சென்ற போலீசார் புஷ்பாவின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.