திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இருக்கும் எழவனம்பட்டியைச் சேர்ந்தவர் இருளப்பன்(40). இவரது மனைவி பாண்டியம்மாள்(36). இந்த தம்பதியினருக்கு ஸ்ரீதேவி என்கிற மகள் இருக்கிறார். அவருக்கு திருமணம் முடிந்து அதே பகுதியில் வசித்து வருகிறார். இருளப்பன் போர்வெல் லாரியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர் அளவுக்கதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

தினமும் குடித்து விட்டு வந்து பாண்டியம்மாளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்றும் மது போதையில் வந்த இருளப்பன், மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் கோபித்து கொண்டு பாண்டியம்மாள் தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு உறவினர்கள் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் மறுநாள் காலையில் வெகுநேரமாக பாண்டியம்மாளின் வீடு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது மகளுக்கு தகவல் கொடுத்தனர். பின் உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு பாண்டியம்மாள் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகே இருளப்பன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். தாய், தந்தை இருவரும் பிணமாகி கிடப்பதை பார்த்து ஸ்ரீ தேவி கதறி துடித்துள்ளார். தகவலறிந்து வந்த காவலர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். 

வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இருளப்பன், மனைவியை கொடூரமாக கொலை செய்திருக்கிறார். பின்னர் மனைவியின் சேலையில் தூக்கிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் மனைவியை கொன்று தற்கொலை செய்த கணவனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.