தஞ்சாவூர் அருகே இருக்கிறது அம்மா குளம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரகுபதி(34). ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த திவ்யா(22) என்கிற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு இரு வீட்டில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் மீண்டும் பெற்றோருடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு திவ்யாவை வரதட்சணை கேட்டு ரகுபதியும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து தகராறு நிலவி வந்துள்ளது. சம்பவத்தன்று இருவரிடையேயும் மீண்டும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதில் மனைவி மீது கோபத்தில் இருந்த ரகுபதி நள்ளிரவில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டின் அருகே கிடந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டார்.

இதில் பலத்த காயமடைந்த திவ்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் திவ்யா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தஞ்சாவூர் காவல் காவலர்கள் திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மனைவியை கொடூரமாக கொலை செய்த ரகுபதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

காதல் திருமணம் செய்த ஆறு மாதங்களில் மனைவியை வாலிபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது