சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருக்கும் கண்ணன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி வெள்ளையம்மாள். இந்த தம்பதியினருக்கு சோனைமுத்து என்கிற மகன் இருக்கிறார். இவர் திருமணமாகி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.  கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக ஆறுமுகம் திடீரென மரணம் அடைந்திருக்கிறார். அப்போது அவர் இயற்கையாக மரணமடைந்ததாக சோனைமுத்து கூறி இறுதிச் சடங்குகளை நடத்தியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோனைமுத்துவின் தாய் வெள்ளையம்மாள் திடீர் மரணமடைந்துள்ளார். அவரும் இயற்கை மரணம் அடைந்ததாக சோனைமுத்து கூறியிருக்கிறார். இதில் உறவினர்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் தேவகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் தேவகோட்டை காவல்துறையினர் சோனைமுத்துவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த சோனைமுத்து ஒரு கட்டத்தில் தாய் தந்தை இருவரையும் கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் என கூறி நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.

தாய் வெள்ளையம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு இயற்கை மரணமடைந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். அதே போல தந்தை ஆறுமுகத்தை கொடூரமாக கொலை செய்துவிட்டு கம்பி விழுந்து இறந்ததாக கூறியிருக்கிறார். தாய் தந்தையை கொலை செய்ததற்கான காரணத்தை சோனைமுத்து கூறியதைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆறுமுகத்திற்கு திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் 6 சென்ட் இடம் இருந்திருக்கிறது. அது கையகப்படுத்தப்பட்ட நிலையில் நஷ்ட ஈடாக 7 இலட்சம் அவரது வங்கிக் கணக்கில் இருக்கிறது. அதை கைப்பற்றுவதற்காக தாய் தந்தை இருவரையும் அடுத்தடுத்து சோனைமுத்து கொலை செய்திருக்கிறார். இதையடுத்து ஆறுமுகம் மற்றும் வெள்ளையம்மாளின் உடலை தோண்டி எடுத்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோனைமுத்து மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.