திருப்பூர் அருகே இருக்கும் காசிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியமேரி(47). இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். பூர்வீக சொத்துக்களை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை வைத்து குடும்பத்தை ஆரோக்கியமேரி கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது மகன் அர்ஷத் (22) படிப்பை முடித்து பல நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. செலவுக்காக அடிக்கடி தனது தாயிடம் பணம் கேட்டு தொந்தரவும் செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்றும் அர்ஷத் தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டிருக்கிறார். அதற்கு ஆரோக்கியமேரி, இனிமேல் காசு தரமுடியாது என்றும், ஒழுங்காக வேலைக்கு சென்று சம்பாதிக்குமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அர்ஷத் தன்னை பெற்ற தாய் என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஆரோக்கியமேரியை சரமாரியாக குத்தி இருக்கிறார். ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆரோக்கியமேரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆரோக்கியமேரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அர்ஷத்தைக் கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அர்ஷத் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அதுகுறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.