நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இருக்கிறது செட்டிகுளம் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ஜெயமணி(60) இந்த தம்பதியினருக்கு ராஜன்(42) என்கிற மகன் இருக்கிறார். இவர் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை விடுவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். மேலும் தாங்கள் குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என தாயிடம் வெகு நாட்களாக தகராறு செய்துள்ளார்.

தற்போது ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மது அருந்தாத ராஜன் நேற்று மீண்டும் கடை திறந்தவுடன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு மீண்டும் தாயுடன் சண்டையிட்டு உள்ளார். ஆனால் அதற்கு ஜெயமணி மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்குள்ளும் தகராறு நிகழ்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த ராஜன் பெற்ற தாய் என்றும் பாராமல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஜெயமணியை சரமாரியாக வெட்டி இருக்கிறார்.

இதில் பலத்த காயமடைந்த ஜெயமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கூடங்குளம் போலீசார் ஜெயமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்து இருக்கும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை தனக்கு எழுதித் தராததால் பெற்ற தாயை குடிபோதையில் மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.