சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகர்(40). இவரது மனைவி புஷ்பராணி(38). இந்த தம்பதியினருக்கு சஞ்சய்(15) என்ற மகனும், பிரியா(14) என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகன் சஞ்சய் மட்டும் தந்தையுடன் வசித்து வருகிறார். சந்திரசேகர் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார்.

சந்திரசேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி(37) என்கிற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனலட்சுமி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். நெருங்கி பழகிய சந்திரசேகரும் தனலட்சுமியும் நாளடைவில் கள்ள காதலர்களாக மாறியுள்ளனர். கணவன் மனைவி போல வாழ்ந்து வந்த இருவரிடையேயும் பிரச்சனைகள் ஏற்படவே சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி, அவரது மகள் ஷாலினி(20) மற்றும் தாயார் ரத்னாவதி(58) ஆகியோருடன் சந்திரசேகர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்து சந்திரசேகரிடம் சேர்ந்து வாழ வரும்படி கூறிய அவர்கள், பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தெரிகிறது. அப்போது வீட்டு வெளியே நின்ற சந்திரசேகரின் வேன் கண்ணாடியை ஷாலினி உடைத்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மூன்று பேரையும் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த ரத்னாவதி, சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். மற்ற இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்து போலீசார் பலியான ரத்னாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். கொலை வழக்கு பதியப்பட்டு தப்பியோடிய சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

'ஆதரவற்றோர்களின் அடைக்கலம்' சிவானந்தா குருகுலம் ராஜாராம் மரணம்..!