கிருஷ்ணகிரி அருகே இருக்கும் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் தங்கவேல்(75). இவரது மகன் சசிகுமார்(39). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் சசிகுமார் அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. பலரிடம் கடனும் வாங்கி இருக்கிறார்.

இதனிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்க தொடங்கியுள்ளனர். இதனால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் தனது தந்தை தங்கவேலுவிடம் கடனை அடைக்க பணம் கேட்டிருக்கிறார் சசிகுமார். ஆனால் தங்கவேல், பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் தந்தையுடன் சசிகுமார் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் இருவரும் இரவு தூங்கச் சென்றுள்ளனர். பணம் தராததால் ஆத்திரத்தில் இருந்த சசிகுமார், தங்கவேலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தங்கவேலுவின் தலையில் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி போட்டிருக்கிறார் சசிகுமார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தங்கவேலு பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தங்கவேல் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் உயிரிழந்த தங்கவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சசிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.