தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் கருப்பத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டித்தேவர். இவரது மகன் போஸ்(40). இவருக்கு பக்கத்து வீட்டில் தெய்வம் என்பவர் வசித்து வருகிறார். அவரது மகன் குமார்(25). தெய்வம், போஸிற்கு சித்தப்பா உறவுமுறை ஆகும். அண்ணன் தம்பிகளான போஸிற்கும், குமாருக்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் இருவரிடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சொத்து பிரச்சனை சம்பந்தமாக காவல்துறையில் இருதரப்பில் இருந்தும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வரும் நிலையில் நேற்று இருவரிடையேயும் மீண்டும் தகராறு நிகழ்ந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குமார், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து போஸை தாக்கியிருக்கிறார். தலையில் பலத்த காயமடைந்த போஸ் நிலைகுலைந்து சரிந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துமனைக்கு போஸ் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் போஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.