சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி குணசுந்தரி(37). இவருக்கு லோகு என்கிற தம்பி இருந்திருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவு காரணமாக லோகு மரணமடைந்துள்ளார். குணசுந்தரியின் அண்ணன் மகன் கணேசன்(26). பெயிண்டராக வேலைப்பார்க்கும் இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு அருள்செல்வி என்கிற மனைவி இருந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கணேசனுக்கும் மறைந்த லோகுவின் மனைவிக்கும் நெருங்கியப் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நாளடைவில் கள்ளக்காதலர்களாக மாறி உள்ளனர். கணேசனுக்கு லோகுவின் மனைவி சித்தி முறையாவார். தனது தம்பி மனைவியுடன், அண்ணன் மகன் தகாத உறவு வைத்திருக்கும் செய்தியறிந்த குணசுந்தரி அதிர்ச்சியடைந்தார். கணேசனிடமும் லோகுவின் மனைவியுடனும் பலமுறை இந்த தவறான உறவை நிறுத்திக் கொள்ளும்படி குணசுந்தரி எச்சரித்துள்ளார். ஆனால் அதை இருவரும் கேட்கவில்லை. தொடர்ந்து தங்கள் கள்ள உறவை வளர்த்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குணசுந்தரி நேற்று கணேசன் வீட்டுக்கு சென்று மீண்டும் அவரிடம் கள்ளக் காதலை கைவிடும்படி வற்புறுத்தியிருக்கிறார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கோபமடைந்த கணேசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குணசுந்தரியை சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின் கணேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். குணசுந்தரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவலர்கள் குணசுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். கொலைவழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் தப்பியோடிய கணேசனை தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் அத்தையை வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.