திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே இருக்கிறது வெலக்கல்நத்தம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்னராஜ்(60). இவர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார். இவரது இரண்டாவது மனைவியின் பெயர் வனிதா(43). இந்த தம்பதியினருக்கு நந்தகுமார், குமரேசன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் நந்தகுமார் மருத்துவ உதவியுடன் திருநங்கையாக மாறியுள்ளார். பெயரையும் நிரோஷா என மாற்றிக்கொண்டார்.

மகன் திருநங்கையாக மாறியதால் சின்னராஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் மனைவி மற்றும் மகன்களுடன் தகராறிலும் ஈடுபட்டிருக்கிறார். நேற்று மாலை வீட்டுக்கு வந்த சின்னராஜ் மீண்டும் குடும்பத்தினருடன் சண்டை போட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கோபமடைந்த வனிதா, நந்தகுமார் மற்றும் குமரேசன் வீட்டில் இருந்த உருட்டுக்கட்டை கொண்டு சின்னராஜை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த அவர் சுருண்டு விழுந்தார்.

தொடர்ந்து அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சின்ன ராஜ் உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சின்னராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். வனிதா, குமரேசன் மற்றும் நந்தகுமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Also Read: 'ஒரு நாள் தலைமையாசிரியர்'..! அதிரடி காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவி..!