சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி(38). இவரது மனைவி கனகா. இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் ராமர்(41) என்பவர் வசித்து வருகிறார். ராமருக்கு, கலியமூர்த்தி சித்தப்பா மகன் ஆவார். இந்தநிலையில் தம்பி மனைவியான கனகா மீது ராமருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. பலமுறை அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் கலியமூர்த்திக்கும் ராமருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு ராமரிடம் தவறாக நடக்க கூடாது என உத்தரவாதமும் வாங்கப்பட்டிருந்தது.

இதனிடையே நேற்று முன்தினம் கனகா வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ராமர், கனகாவின் கையை பிடித்து இழுத்து மீண்டும் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கனகா கூச்சல் போட்டார். உடனடியாக அங்கு அவரின் தந்தை,கணவர் மற்றும் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். ராமரை சரமாரியாக தாக்கிய அவர்கள் மண்வெட்டி கொண்டும் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

பின்னர் கொலையை மறைப்பதற்காக வயல்வெளி அருகே இருந்த மின் கம்பிகளை அறுத்து, ராமரின் உடல் மீது சுற்றி மின்சாரம் தாக்கி இறந்து போல போட்டுவிட்டு சென்றுள்ளனர். ரத்த காயங்களுடன் ராமர் பிணமாக கிடக்கும் தகவல் காவல்துறையினருக்கு சென்றது. விரைந்து வந்த காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அந்த பகுதியில் இருந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் ராமருக்கும் கலியமூர்த்திக்கும் இடையில் முன் விரோதம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கலியமூர்த்தியை காவல்துறையினர் அழைத்து விசாரித்தனர். அப்போது ராமரை கொலை செய்ததாக அவர் கூறியிருக்கிறார். அதன்படி கலியமூர்த்தி,கனகா, அவரது தந்தை ராமர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு கைதாகி இருக்கின்றனர். மேலும் இரண்டு பேரை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.