திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சிவசக்தி (22). இவருக்கும் வேலூர் அருகே இருக்கும் சத்துவாச்சாரியை சேர்ந்த லாவண்யா(20) என்கிற பெண்ணிற்கும் கடந்த 2017ம் ஆண்டு காதல் திருமணம் நடந்து பிரவீனா(2) என்கிற மகள் இருந்துள்ளார். கணவன் - மனைவி இடையே நிகழ்ந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட, தாயுடன் குழந்தை வளர்ந்து வந்தது. இந்த நிலையில் பிரவீன்குமார் (22) என்பவரை லாவண்யா 2-வது திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை பிரவீன்குமாரிடம் கூறாமல் மறைத்துள்ளார்.

குழந்தை பிரவீனா,லாவண்யாவின் தாயிடம் வளர்ந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரவீனாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு லாவண்யா கொண்டு சென்றுள்ளார். அங்கு சில மணி நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது. இதனால் பிரவீனாவின் உடலை லாவண்யா, தன் முதல் கணவர் சிவசக்தியிடம் ஒப்படைத்தார். குழந்தை இறந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்த சிவசக்தி, லாவண்யாவிடம் விசாரித்த போது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த சிவசக்தி காவல்துறையில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவலர்கள் லாவண்யாவையும் அவரது இரண்டாம் கணவர் பிரவீன்குமாரையும் அழைத்து விசாரித்துள்ளனர். குழந்தையின் உடல் பிரதே பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதன் அறிக்கையும் வெளியானது. அதில் குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் நடந்த தீவிர விசாரணையில் குழந்தை கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் கூறிய வாக்குமூலத்தில், இரண்டாவது திருமணம் செய்த லாவண்யாவால் குழந்தையை பிரிந்து இருக்க முடியவில்லை. இதனால் தனது தாயிடன் இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு பிரவீன்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதுதான் பிரவீன் குமாருக்கு, லாவண்யாவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது தெரியவந்தது. 

இதனால் தகராறு ஏற்படவே ஆத்திரம் அடைந்த பிரவீன் குமார் குழந்தையை தூக்கி தரையில் அடித்துள்ளார். இதில் குழந்தை தலையின் பின்பக்கம் அடிபட்டு மயங்கியது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை மரணமடைந்தது. அதை மறைக்க குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என நாடகமாடி இருக்கின்றனர். எனினும் காவல்துறையின் விசாரணையில் சிக்கிக் கொண்டனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.