மதுரை திருமங்கலத்தில் இருக்கும் நடுக்கோட்டையைச் சேர்ந்தவர் பாலமுருகன். வயது 28. இவர் ஒரு ஆலையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். பாலமுருகன் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார். தனது காதலை பலமுறை அந்த சிறுமியிடம் வெளிப்படுத்திய நிலையில், சிறுமி இவரை காதலிக்க மறுத்திருக்கிறார். தொடர்ந்து பலமுறை சிறுமியை வற்புறுத்தி பாலமுருகன் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.

இதனால் கலக்கம் அடைந்த அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் திருமங்கலத்தில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்த பாலமுருகன் தன்னை சிறையில் தள்ள காரணமாக இருந்த சிறுமியை பழிவாங்க முடிவெடுத்தார். இதற்காக மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வந்த சிறுமியை சந்தித்த பாலமுருகன் அவரிடம், "எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது" என்று கூறியவாறு அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை சிறுமி மீது ஊற்றி இருக்கிறார். இதை சற்றும் எதிர்பாக்காத சிறுமி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்துள்ளார்.

இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் தாலுகா காவல் துறையினர் பாலமுருகனை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே ஏற்கனவே அவர் மீது நிலுவையில் இருந்த சிறுமியை தொந்தரவு செய்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடந்த ஓராண்டாக சிறையில் பாலமுருகன் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் மாணவியை எரித்துக் கொலை செய்த வழக்கில் பாலமுருகனுக்கு  ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.