உடுமலை பேட்டையில் இளம்பெண்ணை இன்று காலை ஒருதலை காதலால் கொடூரமாக வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரியகோட்டை ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி சுமதி, கூலி தொழிலாளி. இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் கல்யாணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் நிவேதிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கணேஷ். இவர் பெருமாள்சாமியின் தம்பி ஆவார். கணேஷ் பட்டப்படிப்பு படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வருகிறார். அப்போது சுமதியுடன் கணேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணேஷ் சுமதியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அவரிடம் எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறது இதெல்லாம் தப்பு சுமதி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், கணேஷ் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

இந்நிலையில் சுமதி இன்று காலை வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணேஷ், சுமதியை வழிமறித்து என்னை காதலிக்க முடியுமா முடியாதா? என தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கணேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுமதியை கழுத்தில் ஓங்கி ஓங்கி வேகமாக வெட்டினார். 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கணேஷ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து உடுமலை பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலையாளி கணேஷை வலை வீசி தேடி வருகின்றனர்.