கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை கணவன் அடித்து கொலைசெய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் , அதே பகுதியை சேர்ந்த உறவினரான தவமணி என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவனும், மனைவியும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மணிகண்டனுக்கும் தவமணிக்கும் இடையே பிரச்சனை வந்துள்ளது. அதேபோல, நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மனைவியை அடித்து உதைத்து கீழே தள்ளினார். தரையில் மயங்கி விழுந்த தவமணி அதே இடத்தில் பரிதாபமாக பலியானார்.

மனைவி இறந்து போனதையறிந்த அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், இறந்து கிடந்த மனைவியின் உடலை தூக்கி வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிற்றில் கட்டி தொங்கவிட்டார். பின்னர் அவர் தனது மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தூக்கில் தொங்கிய தவமணியின் உடலை கீழே இறக்கி, இறந்து போன தவமணியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இதற்கிடையே தவமணி இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்களும் குணமங்கலம் கிராமத்திற்கு விரைந்து சென்று தவமணியின் உடலை பார்த்து அழுதனர். அப்போது அங்கிருந்த தவமணியின் கணவர் மணிகண்டன் மீது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்படவே அவர்கள் எடைக்கல் போலீசில் புகார் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விரைந்து சென்று தவமணியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதன் பின்பு மணிகண்டனை போலீசார் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் நடத்திய விசாணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்க தொடங்கினர். அப்போது மணிகண்டன், மனைவியை அடித்து கொலை செய்ததாக கூறினார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் மணிகண்டனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்பு அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் தவமணிக்கு தெரிவந்தது.

இதை தொடர்ந்து தவமணி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மனைவியை அடித்து கொன்றுவிட்டு பிணத்தை ஃபேனில் கட்டிதொங்கவிட்டதும் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.