செங்கல்பட்டில் கஞ்சா போதைக்கு அடிமையான மகனை அடித்தே கொன்ற தந்தை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா, மதுபோதைக்கு அடிமையான மகனை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள சித்தாமூர் அருகே அமைந்துள்ள புளியங்கரணை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 57). இவரது இளைய மகன் ஆனந்த் (வயது 26). மூத்த மகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், ஆனந்த் வேலைக்கு செல்லாமல் தந்தை மற்றும் அண்ணன் கொண்டு வரும் பணத்தை செலவு செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
ஆரம்பத்தில் மது போதைக்கு அடிமையான ஆனந்த் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் சமீப காலமாக அவர் கஞ்சா போதைக்கும் அடிமையாகி தினமும் கஞ்சா பயன்படுத்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுமாறு தந்தை சேகர் பலமுறை கூறியும் ஆனந்த் அதனை கண்டுகொள்ளவில்லை. நேற்று நள்ளிரவு போதை மயக்கத்தில் வீட்டுக்கு வந்த ஆனந்தை தந்தை சேகர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மது போதையில் இருந்த மகன் தனது தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல் தாக்கவும் முற்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகன் தாக்குவதற்காக எடுத்து வந்த கட்டையை கைப்பற்றி அவரை தாக்கியள்ளார். இதில் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கயாமடைந்த ஆனந்த் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.