ரூ.1 கோடி மதிப்புள்ள லம்போர்கினி காரை தீ வைத்து எரித்த நபர்: இதுதான் காரணம்?
கார் உரிமையாளருடனான தகராறு காரணமாக ரூ.1 கோடி மதிப்புள்ள லம்போர்கினி காரை ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கார் மறுவிற்பனை தொழில் செய்து வரும் நபர் ஒருவர், கார் உரிமையாளருடனான தகராறு காரணமாக ரூ.1 கோடி மதிப்புள்ள லம்போர்கினி காரை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், 2009 மாடல் மஞ்சள் நிற லம்போர்கினி கார் சாலையோரமாக தீப்ப்பறி எரிவதையும், அதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியமாக பார்க்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
ஹைதராபாத்தில் உள்ள பஹாடி ஷரீஃப் பகுதியில், கடந்த 13ஆம் தேதி இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. தீ வைத்து எரிக்கப்பட்ட சொகுசு ஸ்போர்ட்ஸ் காரின் மதிப்பு ரூ.1 கோடி என தெரியவந்துள்ளது.
உரிமையோடு கேட்கிறேன்; இந்தியா கூட்டணிக்கு வெற்றியை தேடித் தாருங்கள்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கார் உரிமையாளர், அதை விற்க எண்ணி தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். காரை எரித்ததாக சந்தேகத்துக்குள்ளாகியுள்ள கார் மறுவிற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர், உரிமையாளரின் நண்பர் ஒருவரிடம் அறிமுகமாகி காரை கொண்டு வரச் சொல்லியுள்ளார். அதன்படி, ஏப்ரல் 13 ஆம் தேதி மாலை ஹைதராபாத் புறநகரில் உள்ள மமிடிபள்ளி சாலையில் கார் கொண்டு வரப்பட்டபோது, அவரும் வேறு சில நபர்களும் சேர்ந்து கார் உரிமையாளர் தனக்கு பணம் தர வேண்டும்; தன்னிடம் அவர் கடன் பட்டுள்ளார் என கூறி பெட்ரோல் ஊற்றி காரை தீ வைத்து எரித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
காரை எடுத்துச் சென்ற உரிமையாளரின் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவு 435 இன் கீழ் (தீ அல்லது வெடிமருந்து மூலம் சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் செய்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.