தென்காசி மாவட்டம் கட்டளைக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி(35). இவரது மனைவி இந்துமதி(28). இந்த தம்பதியினருக்கு மித்ரன்(6), மூர்த்தி(2) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆட்டோ ஓட்டுநராக தொழில் பார்த்து வந்த கந்தசாமி கடுமையான வறுமையில் சிக்கி தவித்துள்ளார். போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்பட்டிருக்கிறார்.

வறுமை காரணமாக கடந்த சில நாட்களாக கந்தசாமி மனஉளைச்சலில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் காலை வெகுநேரமாக கந்தசாமியின் வீடு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு கந்தசாமி தூக்கில் பிணமாக தொங்கியிருக்கிறார். அவரது மனைவியும் மகன் மித்ரனும் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். மற்றொரு மகன் மூர்த்தி உயிருக்கு போராடி கொண்டிருந்தான்.

மூர்த்தியை மீட்டு அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். கந்தசாமி வீட்டின் சுவரில் 'எங்கள் சாவுக்கு காரணம் என் வறுமை' தான் எழுதப்பட்டிருந்தது. வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். 

வறுமை தாங்காமல் மனைவி மற்றும் மகன்களை கழுத்தை நெரித்து கொன்ற கந்தசாமி, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஒரு மகன் மட்டும் உயிர் பிழைத்து ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.