தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இருக்கும் திருமங்கலக்கோட்டை கீழையூரைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரது மனைவி மகாராணி. இந்த தம்பதியினருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணுடன் நெருங்கிப் பழகிய சுபாஷ் சந்திரபோஸ் நாளடைவில் அவருடன் கள்ள உறவில் ஈடுபட்டு இருக்கிறார்.

இது அவரது மனைவி மகாராணிக்கு தெரியவரவே கணவரை கண்டித்திருக்கிறார். எனினும் சுபாஷ் சந்திரபோஸ் மனைவியின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரிடையேயும் பலமுறை தகராறு ஏற்பட்டு இருக்கின்றது. சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே கள்ளக்காதல் தொடர்பாக சண்டை நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் வீட்டில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து மனைவியை சரமாரியாக அடித்து இருக்கிறார். மேலும் மகாராணியை அவர் கடித்து கொடூரமாக காயப்படுத்தியும் இருக்கிறார்.

இதனால் வலியில் துடித்த மகாராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாநாடு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இருக்கும் போலீசார் தலைமறைவாக இருக்கும் சுபாஷ் சந்திரபோசை தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்காதலை கண்டித்த மனைவியை கணவர் கடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.