கிருஷ்ணகிரி மாவட்டம் ஐபிகானபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்தநிலையில் சுப்பிரமணி ஐபிகானபள்ளியில் இருக்கும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவரது வீட்டின் அருகே ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் ரேவதி ஏழாம் வகுப்பு படிக்கின்றார். ஒரே பகுதியில் வீடுகள் அமைந்திருப்பதால் சிறுமியுடன் அடிக்கடி சுப்பிரமணி பேசி வந்திருக்கிறார். இதனிடையே சுப்பிரமணி தனக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாக சிறுமி ரேவதி தனது பள்ளி தோழியிடம் திடுக்கிடும் தகவலை கூறியது தற்போது வெளி வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்ரமணியின் வீட்டில் வைத்து தனது கை,கால்களை கட்டிப்போட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறியுள்ளார். அதை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக கத்தியை காட்டி சுப்ரமணி மிரட்டி உள்ளார். மேலும் அதே போல பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி சிறுமி அழுதுள்ளார். வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டியதால் பயந்து போன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் தனது பள்ளி தோழியிடம் விபரத்தை கூறியுள்ளார்.

இது உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் கிருஷ்ணகிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதை அறிந்ததும் சுப்பிரமணி தலைமறைவாகி இருக்கிறார். போக்சோவில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் சுப்ரமணியை நேற்று அதிரடியாக கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.