கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். ஆட்டோ ஓட்டுநரான இவர் அப்பகுதியின் திமுக தொழிற்சங்க துணைச் செயலாளராக இருக்கிறார். இவரது நண்பர் ஒருவருக்கு குழந்தை இல்லாத நிலையில் குழந்தையை தத்தெடுக்க விரும்பி இருக்கிறார். அதற்காக ஜாகிர் உசேன் உதவியுடன் இரண்டு பெண்களை அணுகியுள்ளார்.

ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் ஹசினா மற்றும் கல்யாணி. இவர்கள் இருவரும் குழந்தைகள் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளனர். ஜாகிர் உசனிடம் ஆண் குழந்தைக்கு 3 லட்சம் எனவும் பெண்குழந்தைக்கு 2 லட்சம் எனவும் பேரம் பேசியுள்ளனர். ஆண் குழந்தை வேண்டுமென ஜாகிர் உசேனும் அவரது நண்பரும் கூறியுள்ளனர். ஜாகிர் உசேனிடம் 3 லட்சம் பணத்தை அவரது நண்பர் கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் மாலையில் இருவரும் சூலூருக்கு குழந்தையை வாங்க சென்றுள்ளனர். அங்கு பெண் புரோக்கர்கள் இருவருடன் பிறந்து 40 நாட்களே ஆனா பச்சிளம் ஆண் குழந்தை இருந்துள்ளது.

அப்போது 2 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்த ஜாகிர் உசேன் மீதியை சில நாட்களில் தருவதாக கூறியிருக்கிறார். குழந்தையை பெற்று கொண்ட பிறகு ஜாகிர் உசேன் கமிஷன் கேட்டிருக்கிறார். மீதி பணத்தை கொடுக்கும்போது கமிஷனை பெற்றுக்கொள்ளுமாறு இரு பெண்கள் கூறியுள்ளனர். அதில் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு தகராராகியுள்ளது. இதை அந்த வழியாக சென்றவர்கள் கவனித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் மடக்கிப் பிடித்தனர்.

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். ஜாகிர் உசேன், ஹசினா மற்றும் கல்யாணி மீது ஏற்கனவே குழந்தைகள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.