ஓடும் ரயிலில் திருடிய பணத்தை வைத்து கொண்டு, மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய தொழிலதிபரை  போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

7 மொழிகளில் சரளமாக பேசும் திறமை... இதுவரை 11 நாடுகளுக்கு சென்று வந்துள்ள இவர் பல்வேறு வெளிநாடுகளில் தொழில் முதலீடு செய்துள்ள இவரை தொழிலதிபர் என்று நினைக்கலாம். ஆனால் இவர் மீது 29 திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறுகிறார்கள் ரயில்வே போலீசார். திருச்சூரை சேர்ந்த இவரது பெயர் சாகுல் ஹமீது. எப்பொதும் விமானங்களில் பயணம் செய்யும் சாகுல், தான் திருடுவதற்காக மட்டும் ரயில் பயணம் செய்யும் ஒரு வினோத கொள்ளையன்.

இந்த கொள்ளையன் டார்கெட் முதல் வகுப்பு பயணிகள் மட்டும் தான். எப்போது பயணம் செய்தாலும் சக பயணிகளிடம் இனிமையாக பேசும் சாகுல், எல்லோரும்  தூங்கியதும் தன் வேலையை காட்டுவார்.  முதல் வகுப்பு பெட்டிகளில் கொள்ளை தொடர்பாக, ரயில் பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில், முதல் புகாரிலிருந்து பயணம் செய்த பயணிகளின் லிஸ்டை எடுத்த போலீசார் ஹமீதை மிகவும் சாதூர்யமாக வளைத்துப் பிடித்தனர்.

சேரன், ப்ளூ மவுண்டைன், கொச்சுவேலி ஆகிய ரயில்களில் தான் சாகுல் ஹமீது அதிகமாக கைவரிசை காட்டியுள்ளார். கொள்ளையடித்த பணத்தை சாகுல்  வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை கூறினார் டிஐஜி . நெதர்லாந்து நாட்டில் எம். பி. ஏ  பட்டப்படிப்பை முடித்த சாகுல்,  தான் கொள்ளையடித்த பணத்தில் தனது இரண்டாவது மனைவி சஹானாவுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நைசிவேலி எனும் ஹோட்டல் நடத்தி  வருவதாக போலீசார் கூறுகிறார்கள்.

பொதுவாக முதல் வகுப்பில் பயணம் செய்யும் நபர் திருடமாட்டார் என்கிற பொதுவான எண்ணத்தை பயன்படுத்தி கடந்த 4 ஆண்டுகளில்,  29 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. கைதான சாகுலிடமிருந்து, சுமார் 110 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் சாகுல் ஹமீதின் மனைவி சஹானா உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.