மதுரையில் பட்டப்பகலில் செல்போன் கடை நடத்தி வரும் ஆறுமுகம் என்பவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மதுரையில் 4-க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் கே.புதூர் காந்திபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி, கட்டிட தொழிலாளி. இவரது மகன் ஆறுமுகம் (22). செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியே வந்தார். இதனையடுத்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் உத்தரவிடப்பட்டது. வெளியே வந்த ஆறுமுகம் புதூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். 

இந்நிலையில், இன்று காலை வீட்டில் இருந்து காவல் நிலையம் சென்ற ஆறுமுகம் அங்கு கையெழுத்து போட்டுவிட்டு புதூர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் கையில் ஆயுதங்களுடன் வந்தது. இதை கண்ட ஆறுமுகம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் மர்ம கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

 

பட்டப்பகலில் பொதுமக்கள் நிறைந்த பகுதியில் இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த ஒரு மாதங்களில் மட்டும் மதுரையில் 4-க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியுள்ளதால் பொதுமக்களியே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.