மதுரையை சேர்ந்தவர் ராணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) . இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆராய்ச்சி மாணவியாக இருந்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதத்தில் பல்கலைக்கழக பதிவாளரிடம் ஒரு புகார் அளித்திருந்தார் .

அதில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் கர்ண மகாராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் . இது குறித்து விசாரிக்க நிர்வாகம் சார்பில் குழு அமைக்க பட்டது . அந்த குழுவின் அறிக்கைபடி பேராசிரியர் கர்ண மகாராஜன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று நிரூபணம் ஆனது .

அதனை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு முன் நடைபெற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் கர்ண மகாராஜன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது .ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படப்படவில்லை . இந்த நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு பேராசிரியர் கர்ண மகாராஜன் அண்மையில் விண்ணப்பித்து இருந்தார் . இது மாணவர்களிடையே சர்ச்சையை கிளப்பியது .

இந்த நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் ஆட்சிமன்ற உறுப்பினர்களின் சிறப்பு கூட்டத்தை நேற்று திடீரென்று கூட்டினார் . அதில் பாலியல் புகார் நிருபிக்கப்பட்ட பேராசிரியர் கர்ண மஹாராஜனை கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்புவது என்று முடிவு எடுக்கப்பட்டது .