மதுரையில் கணவர் இறந்து ஓராண்டுக்குள் மறுமணம் பெண் மீது கொலைவேறி தாக்குதல் நடத்திய நிலையில், மருத்துவமனையில் அவரை பார்க்க சென்ற 2-வது கணவரின் நண்பர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை சிம்மக்கல் படித்துறை பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரிக்கும், பாலமுருகனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் பாலமுருகன் உயிரிழந்தார். பாலமுருகன் இறந்த நிலையில், கணவர் வீட்டில் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த மகேஸ்வரிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் என்வருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவருடன் சேர்ந்து வாழ தொடங்கிய மகேஸ்வரி பின்னர் கவுதமை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இதனால், கணவரின் அண்ணன் ஜெயக்குமாருக்கும், மகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், மகேஸ்வரி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதை ஏற்க முடியாத பாலமுருகனின் அண்ணன் நேற்று வீட்டி வாசலில் நின்று கொண்டிருந்த மகேஸ்வரியை ஓட ஓட விரட்டி முகம் சிதையும் வரை வெட்டி கொடூரமாக கொலை செய்ய முயன்றார். இதில், படுகாயமடைந்த மகேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில், ராஜஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், அவரை பார்க்க சென்ற மகேஸ்வரியின் 2-வது கணவரின் நண்பரான குருநாதசேதுபதியை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தொடர்ந்து தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் இதனால் உரிய பாதுகாப்பு வழங்கவும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் மகேஸ்வரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனிடையே, மதுரை அவனியாபுரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவம் உன்றில் மகேஸ்வரியின் 2-வது கணவர் கவுதம் மற்றும் குருநாதசேதுபதி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மதுரையில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்நதுள்ளனர்.