மதுரையில் தூங்கிக்கொண்டிருந்த ரவுடியை மர்ம கும்பல் வீடு புகுந்து வெட்டி தலையை எடுத்து சென்று குப்பையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருநகர் அமைதி சோலைநகரைச் சேர்ந்த சவுந்தர்பாண்டி மீது ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் கொலை உட்பட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று பகலில் சிவகங்கையில் இருந்து காரில் வந்தவர், மதுரை முத்துப்பட்டி 4-வது தெரு அய்யனார்புரத்தில் உள்ள அத்தை ராமலட்சுமி வீட்டில் சாப்பிட்டுவிட்டு உறங்கி கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், வீட்டிற்குள் புகுந்து சவுந்தரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிரிழந்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத கும்பல், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த சவுந்தரின் தலையை வெட்டிப் பையில் எடுத்துக்கொண்டு காரில் தப்பினர். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சவுந்தர்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரவுடிகள் 'கவாத்து' திருப்பதி, 'பிள்ளையார்' கணேசன் தரப்பினர் இடையே முன்விரோதம் உள்ளது. இதனாலேயே இருதரப்பிலும் மாறிமாறி கொலைகள் நடைபெற்று வருகின்றன. 2016ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கணேசனின் மாமா நேருபாண்டி உட்பட இருவர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் திருப்பதி தரப்பைச் சேர்ந்த சவுந்தர்பாண்டி கைது செய்யப்பட்டார். 

ஜாமினில் வந்தவர் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கினார். இவருக்கு இரு மனைவிகள். ஒரு மனைவி வள்ளியூரிலும், மற்றொரு மனைவி சிவகங்கையிலும் உள்ளனர். நேற்று சிவகங்கையில் இருந்து மதுரை வந்து தங்கினார். இதை நோட்டமிட்ட 'பிள்ளையார்' கணேசன் ஆட்கள் கொலை செய்துவிட்டு தலையை எடுத்துச்சென்றனர். பின், பைபாஸ் ரோடு ரயில் பாலத்தின் கீழ் மாலை 6:00 மணிக்கு தலை கண்டெடுக்கப்பட்டது. இதனிடையே தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.