மதுரையில் நடக்கும் கொலை கொள்ளைகளை தடுப்பதற்கவே போலீஸ்கமிசனர் டேவிட்சன் ஒவ்வொரு வார்டுக்கும் தனிப்படை அமைத்திருக்கிறார்.அந்த தனிப்படை கும்பகர்ணனைப்போல் தூங்கிக் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் மதுரையை சுற்றி இருக்கும் நூறு வார்டுகளிலும் சிசிடிவி கேமிரா வைத்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளார். மதுரையில் ரவுடிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதற்கு சான்றாக மளிகைக்கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் அட்டுழியம் செய்திருப்பது மதுரை மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

மதுரை காமராஜா் சாலை சின்னக்கண்மாய் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன். இவா் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நாகராஜன் மளிகைக் கடையை அடைக்க முயன்றபோது, அங்கு வந்த மூவா் தங்களிடம் இருந்த அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் நாகராஜனை வெட்டினா். இதில் நாகராஜனின் சப்தம் கேட்டு அப்பகுதியி பொதுமக்கள் அங்கு வந்துள்ளனா். அப்போது மூவரும் பெட்ரோல் குண்டை மளிகைக் கடையின் மீது வீசிவிட்டு ஆயுதங்களை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிச்சென்றனா்.  இந்த  தாக்குதலில் பலத்த காயமடைந்த நாகராஜன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

மதுரையில் மளிகைக்கடை மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சில் கடையில் இருந்த பெரும்பாலான  பொருள்கள் சேதமாகின. 
 சம்பவ இடத்துக்குச்சென்ற விளக்குதூண் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றது மதுரை போலீஸ்.
இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் பேசும் போது.." மதுரை திகில் நகரம் என்கிற அக்மார்க் முத்திரையை தக்க வைத்துக்கொண்டிருப்பது தான் வேதனையாக இருக்கிறது. மதுரையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஒடுக்கும் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்" என தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

-T.balamurukan