மதுரையில் இன்று காலை அரசு மருத்துவமனையில் புகுந்து பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அண்ணாநகர் அருகே உள்ள கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு ரவுடி முருகன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் மனைவி மகாலட்சுமி (32) உடனிருந்து கவனித்து வந்தார். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மகாலட்சுமி கணவருக்கு காபி வாங்குவதற்காக வெளியில் சென்றுள்ளார். 

அந்த சமயம் 5 பேர்  கொண்ட மர்ம கும்பல்  மாஸ்க் அணிந்தபடி அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தனர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் முக கவசம் அணிந்துள்ளதால் அவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.  திடீரென அந்த 5 பேரும் முருகன் சிகிச்சை பெற்ற வார்டுக்கு சென்றனர். பின்னர், அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் முருகனை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த மர்ம கும்பல் வேக வேகமாக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து தப்பி சென்றனர். இதனை கண்ட நோயாளிகள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். 

இதனையடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை பிடிக்க  தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அரசு மருத்துவமனையில்  ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.