மதுரையில் பட்டப்பகலில் நடுரோட்டில் மதுபோதையில் மாமனாரை கத்தியால் கொடூரமாக குத்திக்கொலை செய்த மருமகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அலங்கம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கையா. இவரது மகள் தனலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நல்லமணி என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழும் இவர்கள் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக இன்று காலை மேலூர் வந்த தங்கையா பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த அவருடைய மருமகன் நல்லமணி அவரிடம் வாக்குவாதம் செய்து கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தங்கையா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதைப்பார்த்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் ஓடி வந்து, நல்லமணியை பிடித்துக்கொண்டார். 

உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தங்கையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாமனாரை கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.