மதுரை அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும், அமமுக பிரமுகருமான அசோகன் சரமாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளப்பட்டியைச் சேர்ந்தவர் அசோகன் (50). முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரான இவர் அமமுக பிரமுகர். இவருக்கு அருண்தேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தினமும் காலையில் அசோகன் அதே பகுதியைச் சேர்ந்தவர்களுடன் நடைபயிற்சி செல்வதை வழக்காக கொண்டுள்ளார். அதன்படி இன்று அதிகாலை 5 மணி அளவில் அசோகன் தனது உறவினர் கார்த்திகைச்சாமி என்பவருடன் அழகர்கோவில் ரோட்டில் நடைபயிற்சி சென்றார்.

அப்போது, 4 இருசக்கர வாகனங்களில் 8 பேர் கொண்டு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை வழிமறித்தனர். இதனை, கண்டு அதிர்ச்சியடைந்த அசோகன் மற்றும் அவரது நண்பர் உயிர் பயத்தில் ஓடினர். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அசோகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். அசோகன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் அமமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.