எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் பக்கம் சாய்ந்து கொண்டு ஆன்மீக அரசியல்.... அரசியல் ஆன்மீகம் என இரண்டையும் கலநது செய்து வருபவர் மதுரை ஆதீன மடாதிபதியான அருணகிரி நாதர். ஆதீனத்துக்கான வாரிசு மடாதிபதிகளை நியமிப்பதும், ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாட்டால் தூக்கி அடிப்பதும இவருக்கு கைவந்த கலையாகும். 

அந்த வகையில், தம்மால் தூக்கி அடிக்கப்பட்ட இளைய ஆதீனத்தை தொடர்ந்து நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்தார் அருணகிரிநாதர். சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்துக்குள் அனுமதித்ததற்கு பல அஜால் குஜால் காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. நித்யானந்தாவின் வசியத்தில் மயங்கிப்போன பெரிய ஆதீனம், அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறார் என ஆதீன நிர்வாகிகளே குற்றம் சாட்டிய நாட்களும் உண்டு. அந்த அளவிற்கு நித்யானந்தாவின் அட்டகாசம் மதுரை ஆதீன மடத்துக்குள் கொடிகட்டி பறந்தது. 

பின்னர், ஆதீனத்தின் சொத்துக்கள் அனைத்தும் நித்யானந்தா மற்றும் ஆசிரமத்துக்கென உயிலையும் எழுதி விட்டிருந்தார் பெரிய ஆதீனம் அருணகிரிநாதர். அந்த அளவிற்கு அவர்களது நெருக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ் அமைப்புகள, மற்ற மட ஆதினங்கள் தூக்கிய போர்க்கொடி மற்றும் எதிர்ப்புக்களை சமாளிக்க முடியாத பெரிய ஆதீனம் நித்யானந்தாவை அங்கிருந்து வெளியேற்றினார்.

பின்னர், நித்யானந்தாவும் அவரோடு மல்லுக்கட்டி பலமுறை சண்டைக்கு நின்றார். அதுமட்டுமின்றி பலமுறை பெங்களூருவில் இருந்து நித்யானந்தா, படைபரிவாரங்களோடு வந்து, ஆதீன மடத்தை கைப்பற்றவும் முயற்சி மேற்கொண்டார். அப்போது, ஜெயலலிதா அரசின் துணை கொண்டு மதுரை ஆதினம் அத்தனையும் முறியடித்தார்.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அருணகிரிநாதர், சாமியார் நித்யானந்தா தரப்பில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், இனி எக்காலத்திலும் நித்யானந்தா அண்டு கோஷ்டி மடத்துக்குள் வரமுடியாது எனவும் தெரிவித்தார். நித்யானந்தா, மதுரை ஆதீன மடததை விட்டு வெளியே 2 வருடங்கள் கடந்து விட்டபோதிலும் நீர்பூத்த நெருப்பாகவே தொடர்ந்து வருகிறது.

ஏற்கனவே நித்யானந்தா மீது, அவருடைய ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரான ஆர்த்தி ராவ் என்பவர் பிடதி காவல் நிலையத்தில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். மேலும் அவர் மீது கொலை மிரட்டல் புகாரும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த சில வருடங்களாக நீதிபதிகளுக்கு டிமிக்கி கொடுத்து வருவதால் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். 

இதனையடுத்து  போலீஸார் நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் நித்யானந்தா தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ள நிலையில், நித்யானந்தா எந்த நேரத்திலும் தன்னை தேடி வந்து விடுவாரோ  என்ற பயத்தில் மீண்டும் பயத்தில் இருக்கிறாராம் ஆதீனம்.