நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் சென்னை மாணவர் உதித் சூர்யாவுக்கு பாதுகாப்பு,  ஜாமீனெல்லாம் கொடுக்கமுடியாது, வரும் செவ்வாய்க்கிழமை வந்து ஆஜராகணும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக கூறியுள்ளது.

சென்னையை சேர்ந்த அரசு மருத்துவரின் மகன் உதித்சூர்யா, இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவமனையில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.

இதனை அடுத்து மாணவர் மீது 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரை பிடிக்க தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால் மாணவர் இதுவரை எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. இதனிடையே  தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உதித் சூர்யா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தன்னிடம் விசாரணை நடத்தியதால் மனஉளைச்சல் ஏற்பட்டு தான் செப்.9-ஆம் தேதியே கல்லூரியிலிருந்து விலகி விட்டதாகவும் தற்போது தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும் கூறியிருந்தார். 

இதனையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி விசாரணைக்கு அழைத்தால் உதித் சூர்யா ஆஜராவாரா? என கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உதித்சூர்யாவுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் முன்ஜாமீன் கோரியும் வாதம் செய்தார். ஆனால் அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், உதித் சூர்யாவின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தார்.

மேலும், நீட் தேர்வில் முறைகேடு நிகழ்ந்தது உறுதியானால் எளிதாக கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல, சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆவணங்கள் முழுமையாக எப்போது வழங்கப்படும்? செவ்வாய்க்கிழமைக்குள் சிபிசிஐடி முன் உதித் சூர்யா ஆஜராக வேண்டும் என்றும் செவ்வாய்க்கிழமை முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.