சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சமர்சிங் மற்றும் காஜல்.  இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நேற்று மாலை அவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி  பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர்.

இன்று காலை வெகு நேரமாகியும் அவர்களின் அறை திறக்கப்படாததால், விடுதி மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் முன்னிலையில் அந்த அறை திறக்கப்பட்டது. அப்போது சுமர்சிங்-காஜல் இருவரும் விஷமருந்திய நிலையில் கிடந்துள்ளனர்.

அருகில் சென்று பார்த்த போது காஜல் ஏற்கனவே உயிரிழந்துள்ளதும், சுமர்சிங் உயிருக்குப் போராடி வருவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சுமர்சிங்கை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், காஜலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சில நாட்களுக்கு  முன்பு திருவல்லிக்கேணியிலுள்ள மற்றொரு தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், அவர்களுடன் மற்றொரு பெண்ணும் தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஆண் ஒருவர் உயிரிழந்தார். மற்ற மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதிகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் விடுதிகளில் தங்குவோரின் விபரங்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து, கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.