தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு மலை அடிவாரத்தில் நேற்று 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும், வாலிபரும் விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். 

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த இளம்பெண்ணையும், வாலிபரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக அந்த இளம்பெண்ணை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும், வாலிபரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இதுகுறித்து போலீசார்  நடத்திய விசாரணையில், விஷம் குடித்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிறவிபட்டியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் என்பது தெரியவந்தது. இவர் சாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

விஷம் குடித்த இளம்பெண் சாத்தூர் அருகே உள்ள கோட்டூரை அடுத்த காலபெருமாள்பட்டியைச் சேர்ந்த ரஞ்சிதா என்பது தெரியவந்தது. இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு ரஞ்சிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கடந்த 13-ந்தேதி ரஞ்சிதாவை தங்களுடைய உறவுக்கார வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர். எனினும் ரஞ்சிதா தன்னுடைய காதலனை மறக்க முடியாமல் தவித்தார். 

இந்த நிலையில் கணவரை உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ரஞ்சிதா நேற்று காலையில் தன்னுடைய காதலரான மனோஜ் பாண்டியனுடன் கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு மலையடிவாரத்துக்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருமணமான 3 நாட்களில் கணவரை உதறிவிட்டு, புதுப்பெண் காதலனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.