உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டப்பட்டவர்களே தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, ஆனால் அந்தபெண் தீக்காயங்களுடன் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி வந்து தற்போது டெல்லி அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பகுதியை சேர்ந்த 23 வயதான   இளம் பெண்ணை அதே பகுதியை சேர்ந்த ஒருவன் காதலித்துவந்துள்ளான். அந்த பெண்ணை  திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல முறை காதலன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.  

 ஒரு கட்டத்தில் காதலன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள  முடியாது என மறுத்துவிட்டார்,  அத்துடன் தனது நண்பர்களுக்கும் அந்தப் பெண்ணை விருந்தாக்க முயற்சித்து அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்தப் பெண்ணை  வன்கொடுமை செய்து வந்துள்ளார்,  காதல் நாடகமாடிய நபர் மற்றும் அவரது நண்பர்களால்  தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  வழக்கில் தொடர்புடைய இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.  ஒருவர் தலைமறைவாக உள்ளார்.  இந்நிலையில் அதற்கான வழக்கு விசாரணை ரேபரேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  அந்த வழக்கில் ஆஜராவதற்காக அந்த பெண் தனது கிராமத்திலிருந்து தனியாக நடந்துச்  சென்றுள்ளார்.  

அப்போது இடையில் வழிமறித்த 5 பேர் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கியதுடன்,  அவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதுடன்,  அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளனர், இதில் அந்தப் பெண் அலறி துடிப்பதைக் கண்டு  அந்நபர்களை  அங்கிருந்து  ஓட்டம் பிடித்தனர், வலியால் துடித்த அந்த பெண் அங்கிருந்து உடலில் பற்றிய தீயுடன் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை ஒடியுள்ளார்.  அப்போது வழியில் கண்ட சிலர் அந்த பெண்ணுக்கு உதவி செய்து அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்து லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அழைத்து சென்றனர். 

இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு தீக்காயம் அதிகம் ஏற்பட்டுள்ளதால் விமானம் மூலம் அவரை டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர் அப்பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது .  அவரது உடலில் சுமார் 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .  இந்நிலையில் அந்தப் பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.